search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தல் நாடகம்"

    • வேல்ராஜின் செல்போன் எண்ணை வைத்து பாளை போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தச்சநல்லூர் பகுதியில் இருப்பது தெரிய வந்தது.
    • வேல்ராஜை மீட்ட போலீசார் அவரிடம் விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் கடத்தல் நாடகம் ஆடியது தெரிய வந்தது.

    நெல்லை:

    நெல்லை பாளை பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது 29), தச்சு தொழிலாளி.

    வேல்ராஜின் மனைவிக்கு தூத்துக்குடி சொந்த ஊர் ஆகும். சமீபத்தில் அவருக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காக வேல்ராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு சென்று விட்டு இரவு 7 மணியளவில் நெல்லை திரும்பினார்.

    அப்போது தனது தந்தைக்கு போன் செய்த வேல்ராஜ் சிறிது நேரத்தில் சமாதானபுரம் வந்து விடுவேன். அங்கு வந்து என்னை அழைத்து செல்லுங்கள் என கூறினார். அதன் பேரில் அவரது தந்தை சமாதானபுரம் சென்று வெகுநேரம் காத்திருந்த போது வேல்ராஜ் வரவில்லை.

    இதனால் அவர் வேல்ராஜின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதுபற்றி அவர் கட்டுப்பாட்டு அறை போலீசில் புகார் செய்தார். அவர்கள் பாளை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உஷார் படுத்தினர். இந்நிலையில் வெகுநேரம் கழித்து தனது தந்தைக்கு வேல்ராஜ் மீண்டும் போன் செய்துள்ளார்.

    அப்போது தன்னை 2 பேர் கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.15 லட்சம் தந்தால் தான் விடுவதாக மிரட்டுவதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நடந்த விபரங்களை கூறினார்.

    இதைத்தொடர்ந்து வேல்ராஜின் செல்போன் எண்ணை வைத்து பாளை போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தச்சநல்லூர் பகுதியில் இருப்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் உடனே அங்கு விரைந்து சென்றனர். அங்கு வேல்ராஜூம், அவருடன் 2 வாலிபர்களும் இருந்தனர்.

    வேல்ராஜை மீட்ட போலீசார் அவரிடம் விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் கடத்தல் நாடகம் ஆடியது தெரிய வந்தது.

    வேல்ராஜ் தாழையூத்து பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களுடன் தொழில் ரீதியாக பழகி உள்ளார். அப்போது அவர்களிடம் தனக்கு சங்கரன்கோவிலை சேர்ந்த ஒரு வியாபாரியுடன் நெருங்கிய பழக்கம் இருப்பதாகவும், அவர் ஒரு கிலோ தங்க நகையை ரூ.25 லட்சத்திற்கு தருவதாகவும் ஆசை காட்டி உள்ளார்.

    அதை நம்பிய 2 வாலிபர்களும் முதற்கட்டமாக வேல்ராஜிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்த வேல்ராஜ், அவர்களுக்கு நகைகள் எதையும் வாங்கி கொடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த வாலிபர்கள் எங்களுக்கு நகைகள் எதையும் தர வேண்டாம். நாங்கள் கொடுத்த பணத்தை மட்டும் கொடுத்து விடுங்கள் என வேல்ராஜிடம் அடிக்கடி கேட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து வேல்ராஜ் தனது தந்தையிடமே பணத்தை பறிக்க திட்டமிட்டுள்ளார்.

    சம்பவத்தன்று தன்னை 2 பேர் ரூ.15 லட்சம் கேட்டு கடத்தியதாக நாடகமாடி உள்ளார். தனது திட்டம் நிறைவேறினால், வாங்கிய ரூ.1 லட்சம் கடனை அடைத்துவிட்டு மீதி பணத்தில் ஜாலியாக வாழ திட்டமிட்டதும் அம்பலமானது.

    இந்த சம்பவம் தொடர்பாக வேல்ராஜ் மற்றும் அவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்த 2 வாலிபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×